பள்ளி, கல்லூரி வாகனங்களில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு


பள்ளி, கல்லூரி வாகனங்களில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு
x
தினத்தந்தி 31 Aug 2021 9:25 PM GMT (Updated: 31 Aug 2021 9:25 PM GMT)

நெல்லையில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

நெல்லை:
பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பதையொட்டி மாணவ-மாணவிகளை அழைத்துச்செல்லும் பஸ், வேன்களை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது டிரைவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் பள்ளிக்கூடங்களில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போல் கல்லூரிகளும் இன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது.
வாகனங்கள் ஆய்வு
இதில் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் அந்தந்த கல்வி நிறுவனத்தின் வேன் மற்றும் பஸ்களில் அழைத்து வரப்படுகிறார்கள். இதையொட்டி மாணவ-மாணவிகள் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையொட்டி நெல்லை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வாகனங்கள் நேற்று என்.ஜி.ஓ. காலனியில் உள்ள நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டன.

கலெக்டர் தலைமையில்...

அங்கு கலெக்டர் விஷ்ணு தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அந்த வாகனங்களில் ஆய்வு நடத்தினர். பிரேக், அவசர வழி, முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி, இருக்கைகள், தரைத்தளம் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் விஷ்ணு டிரைவர்கள், உதவியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் ஆகியோர் தலைமையில் வாகனங்களில் தீப்பிடித்தால் அதை அணைப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

 பேட்டி

இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 88 சதவீதம் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மற்றவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடம் திறந்த உடன் தினமும் காலையில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களின் பெற்றோருக்கு தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் இன்று 17 கல்லூரிகள் திறக்கப்படுகிறது. அங்கும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறும் பள்ளிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராதாபுரம், அம்பை

ராதாபுரம், திசையன்விளை மற்றும் நாங்குநேரி தாலுகா பகுதிகளில் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவல்லி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட பள்ளிகள் துணை ஆய்வாளர் மகாராஜன், மாவட்ட கல்வி அலுவலர் உஷா சாந்தா ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அம்பையிலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அந்த பகுதி கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்தனர்.

Next Story