தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதல்; தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலி


தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் கருணாசாகர்
x
தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் கருணாசாகர்
தினத்தந்தி 31 Aug 2021 9:26 PM GMT (Updated: 2021-09-01T02:56:23+05:30)

பெங்களூருவில் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதிய கோர விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 7 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. காரை அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன்

  தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஒய்.பிரகாஷ். இவரது மகன் கருணா சாகர் (வயது 28). ஒய்.பிரகாசின் சொந்த ஊர் தேன்கனிக்கோட்டை ஆகும். கருணா சாகர் பெங்களூருவில் சில தொழில்களை செய்து வந்தார். அவருக்கு, பெங்களூருவில் ஏராளமான நண்பர்களும் உள்ளனர்.

  நண்பர்களை பார்க்கவும், தொழில் விஷயமாகவும் நேற்று முனதினம் காலையில் ஓசூருவில் இருந்து பெங்களூருவுக்கு தனக்கு சொந்தமான சொகுசு காரில் (ஆடி கியூ-3 வகை கார்) வந்திருந்தார். பின்னர் அவர், தனது நண்பர்களை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவே பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு செல்ல இருந்தார். ஆனால் அவர், ஓசூருக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

தடுப்பு சுவரில் கார் மோதியது

  இந்த நிலையில், பெங்களூருவில் பல்வேறு இடங்களில் நண்பர்களுடன் காரில் வலம் வந்த கருணா சாகர், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கோரமங்களாவுக்கு புறப்பட்டு சென்றார். கோரமங்களா 80 அடி ரோடு, என்.ஜி.வி. ஜங்ஷனில் இருந்து போரம் மால் ஜங்ஷனை நோக்கி அதிகாலை 2 மணியளவில் கருணா சாகரின் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு சுவர், மின் கம்பத்தில் மோதியது.

  மேலும் தறிகெட்டு ஓடிய அந்த சொகுசு கார், அப்பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டிடத்தின் முன்பக்க சுவரில் மோதி நின்றது. இந்த கோர விபத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கி உருக்குலைந்து போய் விட்டது. காரின் 2 டயர்கள் கழன்று ஓடியது.

7 பேர் பலி

  இந்த கோர விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஒய்.பிரகாசின் மகன் கருணா சாகர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். மற்றொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், உயிருக்கு போராடிய நபரை மீட்க நடவடிக்கை எடுத்தனர். தகவல் அறிந்ததும் ஆடுகோடி போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.

  பின்னர் உயிருக்கு போராடிய நபரை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார். இதனால் இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இதையடுத்து விபத்தில் பலியான 7 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் பெங்களூரு போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா மற்றும் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் தனியார் மருத்துவமனைக்கு சென்றும் 7 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அத்துடன் தி.மு.க. எம்.எல்.ஏ. வான ஒய்.பிரகாசுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

டாக்டரும் பலி

  போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவா்கள் கருணா சாகர், அவரது நண்பர்களான மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இஷிதா பிஸ்வாஸ் (25), பெங்களூரு முருகேஷ் பாளையா 2-வது கிராசை சேர்ந்த பிந்து (25), கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அக்சய் கோயல் (25), கேரளாவை சேர்ந்த தனுஷா (29) அரியானா மாநிலத்தை சேர்ந்த உத்சவ் (25), கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி நவநகரை சேர்ந்த ரோகித் (23) என்று தெரியவந்தது.

  இவர்களில் தனுஷா, உத்சவ், ரோகித், அக்சய் கோயல், இஷிதா பிஸ்வாஸ் ஆகிய 5 பேரும் கோரமங்களா 5-வது பிளாக்கில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. பலியானவர்களில் தனுஷா டாக்டர் ஆவார். உத்சவ் ஆடிட்டர் ஆவார். ரோகித், அக்சய் கோயல் தனியார் நிறுவனத்திலும், பிந்து மட்டும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. பிந்துவை தான் எம்.எல்.ஏ.வின் மகன் கருணாசாகர் காதலித்து வந்ததும், அவரையே திருமணம் செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.

எம்.எல்.ஏ. கண்ணீர்

  அதே நேரத்தில் பலியான 7 பேரின் உடல்களும் தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கருணா சாகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவரான ராமலிங்க ரெட்டி எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார். முன்னதாக அவர் கருணாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

  பின்னர் கருணா சாகரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஓசூருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தனர். தன்னுடைய மகனின் உடலை பார்த்து ஒய்.பிரகாஷ் கண்ணீர் விட்டு கதறி அழுதார்

  இதற்கிடையில், தனியார் மருத்துவமனைக்கு விபத்தில் பலியான மற்ற 6 பேரின் குடும்பத்தினரும் திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது பிள்ளைகளின் உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

அதிவேகமே விபத்திற்கு காரணம்

  இந்த நிலையில், விபத்திற்கு உள்ளான சொகுசு காரை ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டியதாகவும், அவரது அலட்சியம், கவனக்குறைவு காரணமாக தான் விபத்து நடந்திருப்பதாகவும் ஆடுகோடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காரை ஓட்டியவர் மதுஅருந்தி இருந்ததாகவும், அதுவும் விபத்துக்கு காரணம் என்றும், அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா தெரிவித்துள்ளார்.

  ஆனால் அந்த காரில் எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 7 பேரும் எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை என்றும், அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விருந்து நிகழ்ச்சி

  ஆனால் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்த கருணா சாகர் தனது நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அவர்களை கோரமங்களாவில் உள்ள தங்கும் விடுதியில் காரில் இறக்கி விடுவதற்காக சென்ற போது விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆடுகோடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பெங்களூருவில் சொகுசு கார் விபத்தில் சிக்கி எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story