26½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 26½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
களியக்காவிளை:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 26½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன சோதனை
குழித்துறையில் நேற்று அதிகாலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆற்றூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் (வயது 30) மற்றும் கல்லுவிளையை சேர்ந்த சுனில் (39) என்பதும், இவர்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து லாரியையும், அதில் இருந்த 15 டன் 700 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், டிரைவர் ராஜேஷ் குமார் மற்றும் சுனிலை போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதுபோல், களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் படந்தாலுமூடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது 11 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து டிரைவர் அதங்கோடு பகுதியை சேர்ந்த அனீஸ் (26) என்பவரை கைது செய்தனர்.
இந்த சம்பங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி காப்புக்காடு குடோனிலும், லாரிகள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் 26½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குழித்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story