அந்தோணியார் குருசடியில் கொள்ளை முயற்சி
வெள்ளமடத்தில் அந்தோணியார் குருசடியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:
வெள்ளமடத்தில் அந்தோணியார் குருசடியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-
அந்தோணியார் குருசடி
ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளமடம், சகாயநகர் சந்திப்பு அருகே புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் அந்தோணியார் குருசடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் வாசலில் ஒரு பக்கம் வேளாங்கண்ணி மாதா சொரூபமும், இன்னொரு பக்கம் மறைசாட்சி தேவசகாயம் சொரூபமும் கண்ணாடி கூண்டுக்குள் உள்ளது.
நேற்று காலையில் குருசடியில் பிரார்த்தனைக்கு சென்றவர்கள் வேளாங்கண்ணி மாதா சொரூபத்தை சுற்றியுள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது மாதா சொரூபத்தின் கழுத்தில் கிடந்த மாலை கீழே சிதறி கிடந்தது. மேலும் சொரூபத்தின் கையில் உள்ள சுண்டு விரல் சேதமடைந்து இருந்தது.
கொள்ளை முயற்சி
இரவில் யாரோ மர்ம நபர்கள் புகுந்து மாதா சொரூபத்தின் கழுத்தில் கிடந்த மாலையை தங்கம் என நினைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அது சாதாரண முத்து மாலை என்பதால் கீழே போட்டுவிட்டு சென்றுள்ளனர். மேலும், மாலையை பிடித்து இழுத்த போது சொரூபம் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் மாரி செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story