தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்
தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தென்காசியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
66 பேர் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், தென்காசி நகர செயலாளர் சுடலை, மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவ சீதாராம், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து உள்பட மொத்தம் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கீழப்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
சங்கரன்கோவில்- கடையம்
சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.கண்ணன், நகர பொருளாளர் வேல்ச்சாமி, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடையத்தில் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் புங்கம்பட்டி ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜீவா என்ற அருணாசலம், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் புளி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புசாரா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மணி மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை- ஆலங்குளம்
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர அவைத்தலைவா் தங்கவேலு தலைமை தாங்கினார். நகர துணைச்செயலாளா் பூசைராஜ், நகர பொருளாளா் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கணபதி, முன்னாள் இணைச் செயலாளர் ராதா, ஒன்றிய செயலாளர் இருளப்பன், பேரூர் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஜெயராமன், வில்சன் உள்ளிட்ட 59 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கடையநல்லூரில் நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.முருகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் அச்சன்புதூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story