ஜலகண்டாபுரம் அருகே பெண் படுகொலை- உடலை புதரில் வீசிச்சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஜலகண்டாபுரம் அருகே பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை புதரில் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேச்சேரி:
ஜலகண்டாபுரம் அருகே பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை புதரில் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெண் கொலை
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி-பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியில் உள்ள புதரில் நேற்று இரவு பெண் பிணம் ஒன்று கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது இறந்து கிடந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் இருந்தது.
இதனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்து அவரது உடலை புதரில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
முதற்கட்ட விசாரணையில் கொலையுண்ட பெண் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி பெரியக்கா (வயது 38) என்பதும், கூலி வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பெண்ணை கொன்ற மர்ம நபர்கள் யார்?, எதற்காக அவரை கொலை செய்தனர்? என்பது குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பெண்ணை மர்ம நபர்கள் கொன்று உடலை புதரில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story