மனைவி வெளியூர் சென்றதால் ஆத்திரம்: குடிபோதையில் தீக்குளித்த தையல் தொழிலாளி சாவு- மல்லூர் அருகே பரிதாபம்


மனைவி வெளியூர் சென்றதால் ஆத்திரம்: குடிபோதையில் தீக்குளித்த தையல் தொழிலாளி சாவு- மல்லூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 1 Sept 2021 4:10 AM IST (Updated: 1 Sept 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

மனைவி வெளியூர் சென்றதால் ஆத்திரம் அடைந்த தையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

பனமரத்துப்பட்டி:
மனைவி வெளியூர் சென்றதால் ஆத்திரம் அடைந்த தையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
தையல் தொழிலாளி
மல்லூர் அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட வேங்காம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 57), தையல் தொழிலாளி. இவருடைய மனைவி ராதா (48). இவர் சேலம் புது பஸ் நிலையத்தில் உள்ள எலக்ட்ரானிக்கல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். 
இவர்களுக்கு கீர்த்தனா, சரண்யா, பவித்ரா, தீபிகா என்ற 4 மகள்களும், தீபன் சக்கரவர்த்தி என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மாதேஸ்வரன் தனது மனைவி ராதா மற்றும் கடைசி மகளான தீபிகா மற்றும் மகன் தீபன்சக்கரவர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார்.
வெளியூர் சென்ற தாயார்
இந்த நிலையில் மாதேஸ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் ராதா சேலம் குகை பகுதியில் உள்ள தனது மூத்த மகள் கீர்த்தனாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார்.
இதனிடையே அன்று இரவு வழக்கம் போல் மாதேஸ்வரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி ராதா அங்கு இல்லாததை கண்டு, மகன் மற்றும் மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அவர்கள் தாயார், சேலத்திலுள்ள அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார். நாளை தான் வருவார் எனக்கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன் யாரை கேட்டு அவள் வெளியூர் சென்றாள்? உடனடியாக இங்கே அவள் வர வேண்டும் என கூறி மகன், மகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 
தீக்குளித்து சாவு
அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேலாகி விட்டது. அம்மா, இப்போது வர முடியாது. நாளை தான் வருவார் என மகன், மகள் இருவரும் அவரிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன் வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழ் போட்டுக்கொண்டு அங்கு கேனில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு, தீபிகா, தீபன் சக்ரவர்த்தி ஆகியோர் கத்தி கூச்சலிட்டு உள்ளனர். 
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாதேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று காலை மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மனைவி வெளியூருக்கு சென்றதால் குடிபோதையில் தீக்குளித்த தையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story