தூத்துக்குடி மாவட்டத்தில் 328 பள்ளிக்கூடங்கள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்


தூத்துக்குடி மாவட்டத்தில் 328 பள்ளிக்கூடங்கள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 1 Sep 2021 2:23 PM GMT (Updated: 1 Sep 2021 2:23 PM GMT)

328 பள்ளிக்கூடங்கள் திறப்பு

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த 328 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடத்துக்கு வந்தனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. தொடர்ந்து நேற்று முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோன்று அனைத்து கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன.
328 பள்ளிக்கூடங்கள் திறப்பு
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 111 உயர்நிலைப்பள்ளிக்கூடங்கள், 218 மேல்நிலைப் பள்ளிக்கூடங்கள் ஆக மொத்தம் 329 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் 328 பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. 
முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வரும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அந்த பள்ளிக்கூடம் மட்டும் திறக்கப்படவில்லை. அடுத்த வாரத்தில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மாவட்டத்தில் 9-ம் வகுப்பில் 24 ஆயிரத்து 48 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 24 ஆயிரத்து 167 மாணவர்களும், 11-ம் வகுப்பில் 20 ஆயிரத்து 838 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 20 ஆயிரத்து 309 மாணவர்களும் ஆக மொத்தம் 89 ஆயிரத்து 362 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளிக்கூடங்களில் சுழற்சி முறையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒருநாளும், 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு நாளும் வருகை தர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மாணவர்கள் உற்சாகம்
அதன்படி 4 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். அவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வந்தனர். 
மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வந்த உடன் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. 
அதன்பிறகு கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்யவும், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டனர். மாணவர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பன்னீர் தெளித்தும், பூக்கள் வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.
வகுப்புகள் தொடக்கம்
பின்னர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. வகுப்பறையில் ஒவ்வொரு பெஞ்சிலும் 2 மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டனர். பின்னர் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பொதுவான விஷயங்களை கலந்துரையாடினர். சில பள்ளிக்கூடங்களில் வார்த்தை விளையாட்டு, தொடர் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய புகைப்படங்கள், பெற்ற வெற்றிக் கோப்பைகள் உள்ளிட்டவை மாணவர்களின் பார்வைக்காக மைதானங்களில் கண்காட்சி போன்று வைக்கப்பட்டு இருந்தது.

Next Story