காங்கேயம் அருகே லாரி -வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.


காங்கேயம் அருகே லாரி -வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
x
தினத்தந்தி 1 Sept 2021 9:36 PM IST (Updated: 1 Sept 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே லாரி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

காங்கேயம், 
காங்கேயம் அருகே லாரி -வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவிலுக்கு சென்றனர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் கோவலன்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கவுதம் (வயது 27). இவரது மனைவி சபிதா (22). இவர்களது 1 வயது குழந்தை வருண்ஆதிக். கவுதம் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். 
அதன்படி ஒரு வேனில் கவுதம், சபிதா, வருண்ஆதிக் மற்றும் கவுதமின் தாயார் ஜெயக்கொடி (47) இவர்களது உறவினர்களான சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கொங்ணாபுரத்தை  சேர்ந்த மகேஸ்வரி (28), கண்ணன் என்ற தரணிஸ்வரன் (18), கனிமொழி (11), பிரகதீஷ் (5) ஆகிய 8 பேரும் நேற்று முன்தினம் சேலத்திலிருந்து பழனிக்கு புறப்பட்டனர். பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அன்று இரவே பழனியில் இருந்து கிளம்பி தாராபுரம் -காங்கேயம் வழியாக சேலத்திற்கு செல்ல  புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். வேனை கவுதம் ஓட்டினார். 
கார்-லாரி மோதல் 
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் காங்கேயத்தை அடுத்துள்ள ஊதியூர் பகுதியில் இவர்களது வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது ஊதியூர் அருகே உள்ள குட்டைக்காடு என்ற இடத்தில் எதிரே லாரி ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேனும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள் எழுப்பிய அபயக்குரலை கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வேனில் படுகாயங்களுடன் இருந்த 8 பேரையும் மீட்டு  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
3 பேர் பலி
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கவுதம்  மற்றும் கவுதமின் 1 வயது குழந்தை வருண்ஆதிக் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் இருந்த மற்ற 6 பேருக்கும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
அங்கு சிசிச்சை பலனின்றி கவுதமின் தாயார் ஜெயக்கொடி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சபிதா, மகேஸ்வரி, கண்ணன் என்ற தரணிஸ்வரன், கனிமொழி, பிரகதீஷ் ஆகிய 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊதியூர் அருகே லாரி-வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 1 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story