திருப்பூரில் முன்விரோதத்தில் மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் கத்தியால் குத்தி கொலை
திருப்பூரில் முன்விரோதத்தில் மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் கத்தியால் குத்தி கொலை
திருப்பூர்,
திருப்பூரில் முன்விரோதத்தில் மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை
சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 32). இவர் திருப்பூர் சூசையாபுரத்தில் தங்கியிருந்து, திருப்பூர் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் விநாயகத்திற்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓடக்காடு லிங்ககவுண்டன் வீதியில் விநாயகம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேர், விநாயகத்திடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
வாலிபர் கைது
இதில் கத்திக்குத்து காயம் அடைந்த விநாயகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடததினர். இதில் விநாயகத்திற்கும், அந்த பகுதியை சேர்ந்த விஷ்வா மற்றும் கார்த்தி ஆகியோருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தியை, விநாயகம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, விஷ்வா மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் சேர்ந்து விநாயகத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிவா (30) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், கார்த்தி, விஷ்வா ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், 2 பேரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story