நடத்தையில் சந்தேகம் மனைவியை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி புதைப்பு கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
மகேந்திரமங்கலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்து சாக்குமூட்டை கட்டி புதைத்த கணவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 65). பன்றிகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி சின்னபாப்பா (50). இவர்களுக்கு சக்திவேல் (30), நாகராஜன் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். சக்திவேல் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் நாகராஜன் விபத்தில் தலையில் அடிபட்டு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில். முருகன் தனது மனைவி சின்ன பாப்பாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகமடைந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 29-ந் தேதி இரவும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முருகன் மனைவியை அடித்து கொன்று சாக்கு பையில் மூட்டை கட்டை வீட்டின் பின்புறம் உள்ள குழியில் புதைத்து விட்டார்.
உடல் தோண்டி எடுப்பு
இந்தநிலையில் நாகராஜ் தனது தந்தையிடம், தாய் 2 நாட்களாக காணவில்லை என கேட்டுள்ளார். அப்போது அவர், தாயை கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் இதுகுறித்து தனது அண்ணன் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் ஜோகிர்கொட்டாய் பகுதிக்கு சென்று புதைக்கப்பட்ட சின்னபாப்பாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-
கழுத்தை நெரித்து...
கடந்த 29-ந்தேதி மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் மனைவியை அடித்தேன். இதில் அவள் மயங்கி விழுந்தாள். இதையடுத்து அவளது கழுத்தை நெரித்து கொன்று சாக்குப்பையில் மூட்டையாக கட்டி பன்றி கழிவுகள் கொட்டும் இடத்தில் உள்ள குழி தோண்டி புதைத்து விட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை, கணவர் அடித்து கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story