விவசாயியை அடித்துக் கொன்ற மகன் நிலத்தகராறில் வெறிச்செயல்


விவசாயியை  அடித்துக் கொன்ற மகன் நிலத்தகராறில் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Sept 2021 10:48 PM IST (Updated: 1 Sept 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்


மூங்கில்துறைப்பட்டு

விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம்(வயது 69). விவசாயியான இவருக்கு அந்தோணிராஜ்(46), ஜான் ஜோசப்(38) என்ற 2 மகன்களும், பெர்னத்மேரி(42), செலின்மேரி(40), ரோசிபெரியநாயகம்(36) என்ற 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற ஜான்ஜோசப், பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கூலி வேலை செய்து வருகிறார். 

அடித்து கொலை

இந்த நிலையில் ஆசீர்வாதத்திடம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தனக்கு பிரித்து தர கேட்டு அவரிடம் ஜான் ஜோசப் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 
அப்போது தந்தை, மகன் இருவரும் உருட்டுக்கட்டைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த ஆசீர்வாதம் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
படுகாயமடைந்த ஜான்ஜோசப்பை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மகன் கைது

இதுபற்றி தகவலறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் தலைமையிலான  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆசீர்வாதத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அந்தோணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்ஜோசப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
நிலத்தகராறில் பெற்ற தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story