பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியது


பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியது
x
தினத்தந்தி 1 Sept 2021 10:49 PM IST (Updated: 1 Sept 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியது.

பொள்ளாச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியது.

பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு சோலையாறு அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. 

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

71 அடியை எட்டியது 

கடந்த சில நாட்களுக்கு முன் 67 அடியை எட்டியதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கேரள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில்  அணை 71 அடியை எட்டி உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சோலையார் அணையில் மின் உற்பத்தி நிலையம் 1 மூலம் 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் சேடல் பாதை வழியாக வினாடிக்கு 600 கன அடி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு வினாடிக்கு 1,100 கன அடி நீர்வரத்து உள்ளது. 

1,100 கனஅடி திறப்பு 

மேலும் பரம்பிக்குளத்தில் இருந்து வினாடிக்கு 1,100 கன அடி நீர் திறக்கப்பட்டு தூணக்கடவு அணை வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 23 மெகாவாட் மின் உற்பத்தி செய்த பின் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப் படுகிறது. 

இன்னும் அணை நிரம்ப ஒரு அடிதான் தேவை என்பதால் அணைக்கு வரும் தண்ணீரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story