நீலகிரியில் பள்ளி, கல்லூரி திறப்பு


நீலகிரியில் பள்ளி, கல்லூரி திறப்பு
x
தினத்தந்தி 1 Sept 2021 10:49 PM IST (Updated: 1 Sept 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டது. அங்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரியில் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டது. அங்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு பிறகு குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது பெயர், வகுப்பு, வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஒரு வகுப்பறையில் சமூக இடைவெளி விட்டு 20 பேர் என அமந்து இருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், உளவியல் ரீதியாக மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். 

முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

அங்கு அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு இருந்தால் உடனடியாக தெரிவித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்ற விவரங்களை கேட்டு பதிவு செய்ய படிவங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் நோய் தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் சாப்பிட்ட பின்னர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

சுழற்சி அடிப்படையில்...

நீலகிரியில் அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்திலேயே கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால் சுழற்சி அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக நேற்று எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இதை அறியாமல் 9-ம் வகுப்பு, பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் பலர் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் ஆசிரியர்கள் விளக்கம் அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு இன்று(வியாழக்கிழமை) வகுப்புகள் நடைபெறுகிறது.

கல்லூரி

இது தவிர 5 மாதங்களுக்கு பிறகு ஊட்டி அரசு கலைக்கல்லூரி திறக்கப்பட்டது. இங்கு தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நேற்று இளங்கலை 2-ம் ஆண்டு, முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. பேராசிரியர்கள் பாடங்களை கற்பித்தனர். 

இன்று இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது. பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடப்பதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story