கெட்டுப்போன மீன் விற்றவர்களுக்கு அபராதம்
ஆண்டிப்பட்டி பகுதியில் கெட்டுப்போன மீன் விற்றவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணை பகுதிகளில் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில் குளிர்சாதன பெட்டிகளில் பல நாட்கள் மீனை இருப்பு வைத்து விற்பனை செய்வதாக தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஜனகர் ஜோதிநாதன், சக்தீஸ்வரன், சண்முகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த 3 வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து சுமார் 75 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை ரசாயன திரவம் ஊற்றி மண்ணில் புதைத்து அழித்தனர். இனி வரும் நாட்களில் இதுபோன்ற கெட்டுப்போன மீனை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story