பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்


பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்
x
தினத்தந்தி 1 Sept 2021 11:56 PM IST (Updated: 1 Sept 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

புதுக்கோட்டை:
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூாிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், கல்லூரிகளில் இளங்கலை 2 மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கும், முதுகலை மாணவர்களுக்கும் வகுப்புகள் நேற்று முதல் மீண்டும் நேரிடையாக வகுப்புகள் தொடங்கின. பள்ளிக்கு மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வந்தனர். பள்ளி நுழைவுவாயிலில் மாணவ-மாணவிகளை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு சோதனை நடத்தியும், கைகளை கழுவ கிருமி நாசினியும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் பெரும்பாலும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர்.
மாணவர்கள் அன்பு பரிமாற்றம்
பல மாதங்களுக்கு பிறகு ஒருவருக்கொருவர் சந்தித்தில் நட்பையும், அன்பையும் மாணவர்கள் பரிமாறிக்கொண்டனர். ஆசிரியர்களும் மாணவர்களை நலம் விசாரித்தனர். ஒரு வகுப்பில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து 20 மாணவ-மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடங்களில் உள்ள சந்தேகங்கள் குறித்து மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் கேட்டனர். ஆசிரியர்களும் பாடங்களை நடத்தினர். 
சீருடை அணிந்து வந்த மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் நடைபெறுவதையும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டார். இதேபோல மேலும் ஒரு பள்ளிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கல்லூரி மாணவர்கள்
இதேபோல கல்லூரிகளுக்கும் மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வந்தனர். நண்பர்கள், தோழிகளை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழ் அல்லது குறுந்தகவல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்புகளில் மாணவ-மாணவிகள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். ஆசிரியர்கள், மாணவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த முகாமில் மாணவிகள் பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் கூட்டம் பஸ்களில் அலைமோதியது.
இனிப்பு வழங்கி வரவேற்பு  
கீரனூர், காரையூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு  மாணவர்கள் வந்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை  3.30 மணி வரை வகுப்புகள் நடந்தது.
இலுப்பூர், மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 9,10 ஆகிய வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து  பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களை இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் சண்முகநாதன் இனிப்புகளை வழங்கி வரவேற்றார். பின்னர் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அன்னவாசல் பகுதிகளில் அங்கன்வாடி திறக்கப்பட்டதையடுத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அன்னவாசல் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கறம்பக்குடி, திருவரங்குளம், ஆதனக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், கந்தர்வகோட்டை, கீரமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். மாணவர்கள் முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story