மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கன்னடத்தை புறக்கணித்தது ஏன்? - விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசு உத்தரவு


மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கன்னடத்தை புறக்கணித்தது ஏன்? - விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 2 Sept 2021 1:59 AM IST (Updated: 2 Sept 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கன்னடத்தை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மெட்ரோ ரெயில் கழகத்திற்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

மெட்ரோ ரெயில் சேவை

  பெங்ளூரு நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி ஆகியோர் கலந்து கொண்டு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இந்த விழா தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. கன்னடம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை எழுப்பியது.

  இதற்கு கன்னட எழுத்தாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கன்னடத்தை புறக்கணித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பி அதற்கு விளக்கம் அளிக்கும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் கன்னட கலாசாரத்துறை மந்திரி சுனில்குமார், மெட்ரோ ரெயில் கழக நிறுவன இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கன்னடம் புறக்கணிக்கப்பட்டது

  நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டது உண்மையிலேயே முக்கியமான விஷயம். மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் நடந்த இந்த விழாவில் கர்நாடகத்தின் ஆட்சி மொழியான கன்னடம் விழாவில் இடம் பெறாதது மிகப்பெரிய தவறு. கன்னடம் தான் ஆட்சி மொழி என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

  இவ்வாறு இருந்தும் அந்த விழாவில் கன்னடம் இடம் பெறாதது துரதிர்ஷ்டமானது. இதில் நீங்களும், உங்களது அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கன்னடத்தை புறக்கணித்தது சகித்துக்கொள்ள முடியாது. மொழி உணர்வுப்பூர்வமான விஷயம். அதை விழாவில் புறக்கணித்தது, மாநில மக்களுக்கு தவறான தகவல் செல்லும் வகையில் உள்ளது.

உரிய நடவடிக்கை

  கன்னட மொழியை வளர்க்க வேண்டியது அரசின் துறைகளின் கடமை ஆகும். அதனால் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கன்னடத்தை புறக்கணித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அத்துடன் இதில் கவனக்குறைவாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இவ்வாற மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story