கேரளாவில் இருந்து தினமும் வந்து செல்லும் மாணவர்களுக்கு கட்டாய தனிமையில் இருந்து விலக்கு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
கேரளாவில் இருந்து தினமும் வந்து செல்லும் மாணவர்களுக்கு கட்டாய தனிமையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
கோலார்:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கோலாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கட்டாய தனிமை
கர்நாடகத்தில் இன்று (நேற்று) முதல் தினமும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 1½ கோடி டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் ஆவது தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம். மாநிலத்தின் எல்லைகளில் அமைந்துள்ள பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த மாதம்(ஆகஸ்டு) கர்நாடகத்திற்கு 1.12 கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியது. ஒரே மாதம் 1.10 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் 1½ கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். கேரளாவில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாநிலத்தில் இருந்து கல்வி நோக்கத்திற்காக தினமும் வந்து செல்லும் மாணவர்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எங்கும் நடக்கவில்லை
தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது. பீதர், யாதகிரி, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்குகிறார்கள். சீனிவாசபுராவில் இன்று (நேற்று) ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம்(ஆகஸ்டு) 26-ந் தேதி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அது 1-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 26-ந் தேதி சிலர் (ரமேஷ்குமார் எம்.எல்.ஏ.) வந்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்துள்ளனர். இதில் எந்த அதிகாரியும் கலந்து கொள்ளவில்லை. இது போல் மாநிலத்தில் எங்கும் நடக்கவில்லை. இதற்கு முன்பு அவர் தான் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார். மாநில மக்கள் நமது செயல்பாடுகளை கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
தகராறு இல்லை
சிலர் பேசுகிறார்கள், மாண்புகள் குறித்து உரையாற்றுகிறார்கள். ஆனால் அவா்கள் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று. அரசு எடுக்கும் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும். அவருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story