உற்சாகத்துடன் பள்ளி, கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள்


உற்சாகத்துடன் பள்ளி, கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 2 Sept 2021 2:13 AM IST (Updated: 2 Sept 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 294 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 294 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

கொரோனா தொற்று குறைவு

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் நோய் தொற்று மீண்டும் அதிகரித்ததால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இதனால் மாணவ-மாணவியர் ஆன்லைன் முறையில் கற்றல் பணியை மேற்கொண்டு வந்தனர்.
 இந்த நிலையில் மாநிலம் முழுவதும் நோய்த்தொற்று வெகுவாக குறைந்த நிலையில் தமிழக அரசு விரிவான ஆலோசனைக்கு பின்பு நேற்று முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் 179 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 86 தனியார் பள்ளிகள் மற்றும் 29 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த பள்ளிகள் அனைத்திலும் அரசு அறிவுறுத்தியபடி வகுப்பறைகளில் 20 முதல் 24 மாணவ மாணவிகளே அமர வைக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில ்75 முதல் 80 சதவீத மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்திருந்தனர். விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 423 மாணவிகள் வர வேண்டிய நிலையில் 313 மாணவிகளே வந்திருந்தனர். அரசு மாணவியர் விடுதியில் தங்கும் மாணவிகள் உடனடியாக பள்ளிக்கு வராத நிலை இருந்ததாக பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார்.
பள்ளி வளாகங்களில் மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து இருந்தாலும் பள்ளி முடிந்து வெளியே வந்தவுடன் முக கவசங்கள் இல்லாத நிலையிலேயே காணப்பட்டனர். எனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவியருக்கு பள்ளியிலிருந்து வீடு சென்று சேரும் வரை முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும். கிராமங்களிலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் பார்வையிட்டு குழந்தைகளுக்கு மதியம் சூடான உணவு வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தார்.

 கல்லூரிகள்

 இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. மாணவர்கள் அரசு அறிவுறுத்தியபடி சுழற்சி முறையில் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து கல்லூரிகளிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன. கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகளும் உற்சாகத்துடன் வந்தனர்.

Next Story