மாவட்டத்தில் 595 பள்ளிகள் மீண்டும் திறப்பு


மாவட்டத்தில் 595 பள்ளிகள் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 2 Sept 2021 2:13 AM IST (Updated: 2 Sept 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 595 பள்ளிகள் மீண்டும் திறப்பு

சேலம், செப்.2-
சேலம் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 5 மாதங்களுக்கு பிறகு 595 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முதற்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் நடத்துவதற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 595 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 295 அரசு பள்ளிகளும், 35 நிதியுதவி பெறும் பள்ளிகளும், 215 மெட்ரிக், சுயநிதி பள்ளிகளும், 50 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் அடங்கும். இந்த பள்ளிகளில் 92 ஆயிரத்து 397 மாணவர்களும், 90 ஆயிரத்து 985 மாணவிகளும் என மொத்தம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 382 பேர் படித்து வருகிறார்கள்.
உடல் வெப்ப பரிசோதனை
சேலம் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். முககவசம் அணிந்து வந்த அவர்களை சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். சீருடை அணிந்த பட்டாம் பூச்சிகளாக பள்ளிக்கூடங்களுக்கு மாணவ, மாணவிகள் வந்ததை காணமுடிந்தது.
பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு முதலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கைகளில் சானிடைசர் தெளித்து சமூக இடைவெளியுடன் வகுப்பறைகளுக்கு செல்லுமாறு மாணவ, மாணவிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
கிருமி நாசினி
ஏற்கனவே வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் சுத்தம் செய்து வைத்திருந்ததால் மாணவ, மாணவிகள் தங்களது வகுப்பறைக்கு சென்று அமர்ந்தனர். ஒரு பெஞ்சுக்கு 2 பேர் வீதம் ஒரு அறையில் 20 பேர் மட்டும் அமர வைக்கப்பட்டனர். மாணவர்கள் அமர்ந்த பெஞ்சுகளில் ஏற்கனவே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருந்தது. 
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களையும், தோழிகளையும் பார்த்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்றுவதை உறுதிப்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டும் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன.
கல்லூரிகள் திறப்பு
இதேபோல், சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும் சுழற்சி அடிப்படையில் வகுப்புகள் தொடங்கின. முன்னதாக கல்லூரி நுழைவு வாயிலில் கல்லூரி ஆசிரியர்கள் நின்று கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்து உள்ளே செல்ல அனுமதித்தனர். அதேபோல், அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு கல்லூரியிலேயே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த 5 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் தொடங்கியதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலத்தை தொடர்ந்து எடப்பாடி, ஆத்தூர், மேட்டூரில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

Next Story