திரைப்பட வினியோகஸ்தர் மர்ம சாவு


திரைப்பட வினியோகஸ்தர் மர்ம சாவு
x
தினத்தந்தி 1 Sep 2021 8:43 PM GMT (Updated: 2021-09-02T02:13:59+05:30)

திரைப்பட வினியோகஸ்தர் மர்ம சாவு

சேலம், செப்.2-
சேலத்தில் தங்கும் விடுதியில் திரைப்பட வினியோகஸ்தர் மர்மான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரைப்பட வினியோகஸ்தர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புங்கவாடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 48). திரைப்பட வினியோகஸ்தர். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி சேலம் ரெயில் நிலைய பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அப்போது விடுதி பணியாளர்களிடம், தான் திரைப்பட வினியோகஸ்தர் என்றும், சேலத்தில் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சிலரை பார்க்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் தங்கி இருந்த அறை வெகு நேரம் ஆகியும் திறக்கவில்லை. அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையொட்டி விடுதி ஊழியர்கள் அவர் தங்கி இருந்த அறை கதவை தொடர்ந்து தட்டினர். ஆனால் அறை திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது ஜெயசீலன் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தீவிர விசாரணை
இது குறித்து விடுதி ஊழியர்கள் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பங்கி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயசீலன் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஜெயசீலன் உடல் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. வாந்தி எடுத்து உள்ளார். மேலும் அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் யார், யாரிடம் அதிக நேரம் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரித்தோம். அதில் திருப்பூரை சேர்ந்த ஒருவரிடம் அடிக்கடி பேசி இருக்கிறார்.
திருப்பூரை சேர்ந்தவரிடம் தொடர்பு கொண்ட போது ஜெயசீலன் அவரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்று இருப்பதாக அவர் கூறி உள்ளார். எனவே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம். 
இவ்வாறு அவர்கள்கூறினர்.

Next Story