ஊராட்சி செயலாளர் மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை


ஊராட்சி செயலாளர் மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Sept 2021 6:30 AM IST (Updated: 2 Sept 2021 6:30 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே ஊராட்சி செயலாளர் மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே ஊராட்சி செயலாளர் மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளர்கள் மாற்றம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிங்கல்பாடி, பாக்கம், மேல்முட்டுக்கூர், கொத்தகுப்பம், சின்னசேரி, பள்ளிகுப்பம் ஆகிய  ஊராட்சிகளின் செயலாளர்கள் நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சியில்  கே.கே.வி.ராஜேஷ் என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். அவர் பள்ளிக்குப்பம் ஊராட்சி செயலாளராகவும், கொத்தகுப்பம் ஊராட்சி செயலாளர் வாசு மேல்முட்டுக்கூர் ஊராட்சி செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

முற்றுகை- சாலை மறியல்

இந்த நிலையில் மேல்முட்டுக்கூர் ஊராட்சி செயலாளர் ராஜேஷை பணி இடமாற்றம் செய்யக்கூடாது எனவும், அவரை மீண்டும் மேல்முட்டுக்கூர் ஊராட்சி செயலாளராக பணி மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலையில் பெண்கள் மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து கல்மடுகு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்குமாறு வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. 

கோரிக்கை மனு

தொடர்ந்து கிராம மக்கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.தயாளனை நேரில் சந்தித்து மேல்முட்டுக்கூர் ஊராட்சி செயலாளர் ராஜேஷை மீண்டும் இதே ஊராட்சியில் பணியாற்ற ஆவன செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story