ஓசூரில் மாமனாரை பாட்டிலால் குத்திய கட்டிட மேஸ்திரி கைது
ஓசூரில் மாமனாரை பாட்டிலால் குத்திய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் அருகே மூக்கண்டபள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது49). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டருகே வசித்து வருபவர் மணி (23). கட்டிட மேஸ்திரி. இவர்கள் 2 பேரும் உறவினர்கள். சரவணனின் மகள் பிரியதர்சினி (24) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தந்தை வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், மணியும், பிரியதர்சினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டு சென்னையில் குடித்தனம் நடத்தி வருகிறார்கள். கடந்த 30-ந்தேதி, அவர்கள் 2 பேரும் சரவணனின் வீட்டுக்கு வந்தனர். அவர்களை, சரவணன் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக சரவணனை, மணி தகாத வார்த்தைகளில் திட்டி பாட்டிலால் குத்தினார். இச்சம்பவம் குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story