லண்டனில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை
லண்டனில் இருந்து சென்னைக்கு 8 மாதங்களுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கியது. முதல் விமானத்தில் 9 குழந்தைகளுடன் 189 பயணிகள் சென்னை வந்தனர்.
கொரோனா பரவல்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று முதல் அலை காரணமாக கடந்த ஆண்டு பன்னாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வர மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரவும், இந்தியாவில் தங்கி இருந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகளுக்கு சிறப்பு விமானங்களில் அழைத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா முதல் அலை குறைய தொடங்கியதால் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இறுதியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை பிரிட்டீஷ் ஏா்வேஸ் நிறுவனம் மீண்டும் தொடங்கியது. சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் சிறப்பு விமான சேவைகளை தொடங்கியது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து உள்பட சில நாடுகளில் உருமாறிய கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பா் மாத இறுதி வாரத்தில் இருந்து விமான சேவைகளை பிரிட்டீஷ் ஏா்வேஸ் நிறுவனம் மீண்டும் நிறுத்தியது.
நேரடி விமான சேவை
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து உள்பட சில நாடுகளில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்தது. இதையடுத்து லண்டனில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டும் விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது. ஆனால் சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்கவில்லை. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் லண்டன் செல்ல வேண்டுமானால் பெங்களூரு, மும்பை, டெல்லி சென்று அங்கிருந்து லண்டன் செல்ல வேண்டிய நிலை இருந்தது.இந்தநிலையில் 8 மாத இடைவெளிக்கு பிறகு பிரிட்டீஷ் ஏா்வேஸ் நிறுவனம் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. அதன்படி லண்டனில் இருந்து பிரிட்டீஷ் ஏா்வேஸ் முதல் விமானம் 9 குழந்தைகள் உள்பட 189 பயணிகள், 14 விமான ஊழியா்கள் என 203 பேருடன் நேற்று அதிகாலை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது.இந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து லண்டனுக்கு இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை
இந்த விமானம் வாரத்தில் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறது. அதேபோல் சென்னையில் இருந்து லண்டனுக்கு திங்கள், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு வாரத்தில் 5 நாட்கள் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி சேவைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே லண்டனில் இருந்து வந்த 189 பயணிகளுக்கும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழக சுகாதார துறையினா் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தினாா்கள். லண்டனில் பரிசோதித்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் அவா்களுக்கும் மீண்டும் பரிசோதனை செய்த பிறகே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
உருமாறிய கொரோனா வைரஸ்
பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் லண்டனில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்து முடிவு வந்த பின்னர்தான் விமானநிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சென்னையில் பரிசோதனை செய்த பிறகு முடிவுகள் வருவதற்கு முன்பே வீட்டுக்குதான் செல்ல வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.லண்டன் பயணிகள் மூலம் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்காகவே இதுபோன்ற பரிசோதனைகள் நடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story