மின்சாரம் தாக்கி கணவர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதி


மின்சாரம் தாக்கி கணவர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 2 Sept 2021 10:00 AM IST (Updated: 2 Sept 2021 10:00 AM IST)
t-max-icont-min-icon

குளிப்பதற்கு வெந்நீர் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மின்சாரம் தாக்கியது
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம், சுந்தரர் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (30). இவர்களுக்கு 12 வயதிலும், 8 வயதிலும் 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை சதீஷ், குளிப்பதற்காக வீட்டில் உள்ள மின்சார ஹீட்டர் மூலம் வெந்நீர் போட முயன்றார். இதற்காக ‘சுவிட்ச்சை ஆன்’ செய்தபோது, அவரை மின்சாரம் தாக்கியது. கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவருடைய மனைவி ரேவதி, கணவரை காப்பாற்ற முயற்சி செய்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

கணவர் சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மின்சாரம் தாக்கியதில் சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்
அதேபோல மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அனிப்ஷேக் (24). இவர் செம்பாக்கம் பஜனை கோவில் தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை வயர் மூலம் மின்விளக்கை இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story