கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி இடம் மீட்பு; நிர்வாகம் நடவடிக்கை


கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி இடம் மீட்பு; நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Sept 2021 10:13 AM IST (Updated: 2 Sept 2021 10:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்குச் சொந்தமான, மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் 2 ஆயிரத்து 166 சதுர அடி பரப்பளவிலான இடம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இந்த இடம் காலி மனையாக இருப்பதுடன், வாடகை நிலுவை தொகையும் அதிகம் இருந்தது. இந்த இடத்தில் கோசாலை அமைத்தால் கோவிலுக்கு நன்மை பயக்கும் என்பதால் மனையை காலி செய்து கோவில் வசம் ஒப்படைக்க கடந்த 2012-ம் ஆண்டு அறிவிப்பு அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து வாடகைதாரரின் வாரிசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவில் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இணை-கமிஷனர் காவேரி முன்னிலையில் அந்த சொத்து கோவில் வசம் எடுக்கப்பட்டது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.5 கோடியாகும். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட கணபதி நகரில் சுமார் 30 சென்ட் அரசுக்கு சொந்தமான நீர்நிலை இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று சென்னை கோட்டாட்சியர் ரவி தலைமையில் மாதவரம் தாசில்தார் சபாநாயகம் மற்றும் வருவாய்த் துறையினர் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அரசு நீர்நிலை இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த வீட்டை இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது.

Next Story