கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்த வேண்டும்; மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை


கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்த வேண்டும்; மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 2 Sept 2021 10:49 AM IST (Updated: 2 Sept 2021 10:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுரை வழங்கினார்.

கலெக்டர் ஆய்வு
தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் காஞ்சீபுரம் வருவாய் மாவட்டத்தில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் நேற்று தொடங்கியது. பள்ளியில் நுழையும் முன் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, முக கவசம், கிருமி நாசினிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வகுப்புகளில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சின்ன காஞ்சீபுரம் பி.எம்.எஸ் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி நேரில் சென்று பள்ளியில் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவ-மாணவிகள் அனைவரும் முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளி மற்றும் அடிக்கடி கை கழுவுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா அறிகுறிகள்
காய்ச்சல், சளி போன்ற கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு மாணவ-மாணவிகளை கேட்டு கொண்டார்.அப்போது அவருடன் தமிழக தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வன், பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி ஆகியோர் உடன் இருந்தனர்.இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், காஞ்சீபுரம் மாவட்டத்தில்இயங்கிவரும் 16 என்ஜினீயரிங் கல்லூரிகள், 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 10 தொழில்நுட்ப கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டம்

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்ததாவது:-
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகளை அனைத்து கல்லூரிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தடுப்பூசி செலுத்திகொள்ள அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏதுவாக முகாம்கள் ஏதேனும் தேவையிருப்பின் மாவட்ட நிர்வாகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story