தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் ‘அபேஸ்’; மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
இன்சூரன்சு கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறி தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கலைஞர் நகர் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தயாளன் (வயது 55). இவர் தி.மு.க. 14-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் தயாளன் வழக்கம்போல் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்தார் அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு பேசிய மர்ம நபர் ஒருவர், தாங்கள் இன்சூரன்சு கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், வங்கிக்கணக்கில் உங்களது இன்சூரன்சு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது வங்கி எண்ணின் ரகசிய குறியீட்டை(ஓ.டி.பி.)-ஐ தெரிவித்தால் உடனடியாக பணத்தை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய தயாளன், போனில் பேசிய நபரிடம் வங்கியின் ரகசிய குறியீட்டு எண்ணை 5 முறை தெரிவித்தார்.
ரூ.2¼ லட்சம் அபேஸ்
அதைத்தொடர்ந்து அவர் மாலை நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து 5 தவணையாக ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், கணக்கு வைத்துள்ள வங்கி வங்கியில் விசாரித்தபோது, தன்னுடன் போனில் பேசிய மர்மநபர் மூலம் நூதன முறையில் தான் மோசடி செய்து ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மப்பேடு போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் யார்? என தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story