திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 2 Sept 2021 1:55 PM IST (Updated: 2 Sept 2021 1:55 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை தரவும் வருவார்கள்.

அவ்வப்போது கலெக்டர் தலைமையில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெறும். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வந்தது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் குரங்குகளை பிடித்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் நேற்று வன அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் 2 இடங்களில் இரும்பால் ஆன கூண்டை அமைத்தனர். அந்த கூண்டுக்குள் வாழைப்பழம், முட்டை, வேர்க்கடலை போன்றவற்றை வைத்தனர். அதை சாப்பிட கூண்டுக்குள் குரங்குகள் வந்தபோது பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 6 குரங்குகளில் 4 குரங்குகளை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். மேலும் 2 குரங்குகளை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். பிடிபட்ட 4 குரங்குகளையும் வன அதிகாரிகள் பூண்டி காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

Next Story