விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் தேனி உள்பட 35 இடங்களில் நடந்தது
விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் தேனி உள்பட 35 இடங்களில் கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை விலக்கி வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த கோரி தமிழகம் முழுவதும் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
அதன்படி, தேனி பெத்தாட்சி விநாயகர் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடையை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
35 இடங்கள்
இதுபோல ஆண்டிப்பட்டியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர்கள் பூங்கொடி, இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கலாம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக்கூடாதா? என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மனோஜ்குமார், வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொப்பயம்பட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி, ராஜக்காபட்டி ராமகிருஷ்ணாபுரம், கீழமுத்தனம்பட்டி ஆகிய கிராமங்களில், இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதுபோல், பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், போடி, கடமலைக்குண்டு உள்பட மாவட்டத்தில் மொத்தம் 35 கோவில்கள் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெரியகுளத்தில் நகர தலைவர் சுகுமார் தலைமையிலும், கடமலைக்குண்டுவில் ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்ற பகுதிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கம்பம்
கம்பம் நகர இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி தரவேண்டும் என கோரி கம்பம் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் வழிபாடு நடந்தது. இதற்கு இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஹரிஹரன், நகர பா.ஜ.க தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் தெற்கு மாவட்ட செயலாளர் மாயலோகநாதன் தலைமையில் கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story