4 ஊராட்சி செயலாளர்கள் பணி நீக்கம்


4 ஊராட்சி செயலாளர்கள் பணி நீக்கம்
x
தினத்தந்தி 2 Sept 2021 9:32 PM IST (Updated: 2 Sept 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்ததால் 4 ஊராட்சி செயலாளர்களை பணி நீக்கம் செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

குடியாத்தம்

போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்ததால் 4 ஊராட்சி செயலாளர்களை பணி நீக்கம் செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

போலி சான்றிதழ்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மோர்தானா ஊராட்சி செயலாளராக விநாயகம் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். 

தற்போது ஊராட்சி செயலாளர்கள் பணியில் சேர்ந்தபோது சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதில் மோர்தானா ஊராட்சி செயலாளர் விநாயகம் சமர்பித்த பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் போலியானது என தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து  கலெக்டர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் க.தயாளன் மோர்தானா ஊராட்சி செயலாளர் விநாயகத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பணிநீக்கம்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பரவக்கல் ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வந்த லோகநாதன் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு பணியிட மாறுதலாகி பாலூர் ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வந்த பாஸ்கர் ஆகிய 2 பேரின்  பத்தாம் வகுப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

ஆய்வில் 2 பேரும் போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இருவரையும் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) பாரி இருவரையும் பணி நீக்கம் செய்தார்.

புத்தூர் செயலாளர்

காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.

இதில் புத்தூர் ஊராட்சி செயலாளர் ராஜாரெட்டி போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. 

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் அவரை பணி நீக்கம் செய்து காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நந்தகுமார் உத்தரவிட்டார்.

Next Story