அ.தி.மு.க. நிர்வாகியின் வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்


அ.தி.மு.க. நிர்வாகியின் வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 2 Sept 2021 9:38 PM IST (Updated: 2 Sept 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மரணம் அடைந்ததையொட்டி, துக்கம் விசாரிக்க சென்ற அ.தி.மு.க. நிர்வாகியின் வேன் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

செம்பட்டி:

 ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மரணம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 63), நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். 

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக விஜயலட்சுமியின் உடல், சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  துக்கம் விசாரிக்க...

அதன்படி மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ராஜாராம் (51), கோபால் (58), தன்ராஜ் (43) ஆகியோர் துக்கம் விசாரிப்பதற்காக தேனி ேநாக்கி நேற்று வேனில் சென்று கொண்டிருந்தனர்.
  
ராஜாராமுக்கு சொந்தமான அந்த வேனை, குத்தாலத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜ் (53) ஓட்டினார். திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் நேற்று காலை வேன் சென்று கொண்டிருந்தது. 

செம்பட்டி அருகே சுதனாகிபுரம் என்னுமிடத்தில் வேன் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் தடுப்புசுவரில் மோதியது. 

  தீப்பிடித்து எரிந்த வேன்

பின்னர் அந்த வேன், நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து டிரைவர் கோவிந்தராஜ் உள்பட 4 பேரும் கதவை திறந்து வேனில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர்.

சிறிதுநேரத்தில் மள, மளவென வேனில் தீப்பிடித்தது. கொழுந்து விட்டு வேன் எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. 

 4 பேருக்கு சிகிச்சை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் அங்கு விரைந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம், செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story