வேலை கிடைக்காத விரக்தியில் புதுமாப்பிள்ளை தற்கொலை
திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மூலக்குளம், செப்.3-
திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுமாப்பிள்ளை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கைப்பாணிக் குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த டிஷாந்தி (22) என்பவரை காதல் திருமணம் செய்தார்.
திருமணத்துக்கு பிறகு புதுவை ரெட்டியார் பாளையம் ஜெயா நகரில் ஒரு வீட்டின் மாடி வீட்டில் வெங்கடேசன் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வந்தார். சரியான வேலை கிடைக்காததால் குடும்பத்தை நடத்த முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் ஆடி என்பதால் கடந்த மாதம் டிஷாந்தி தனது தாயாரின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஒரு மாதம் கழித்து சமீபத்தில் வெங்கடேசனின் சொந்த ஊரான மரக்காணம் கைப்பாணிக்குப்பத்துக்கு டிஷாந்தியை அவரது பெற்றோர் விட்டுச் சென்றதாக தெரிகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன் அதாவது, 31-ந் தேதி வெங்கடேசன் தனது மனைவியுடன் ரெட்டியார்பாளையம் வீட்டுக்கு வந்தார். பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்காததால் விரக்தியில் மனைவியிடம் வெங்கடேசன் புலம்பியதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் ஒரு அறையில் வெங்கடேசன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப்பார்த்து டிஷாந்தி அதிர்ச்சி அடைந்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தூக்கில் தொங்கிய வெங்கடேசனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே வெங்கடேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
6 மாதத்தில் சோகம்
இதுகுறித்து டிஷாந்தி கொடுத்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story