திருப்பூர் 11-வது வார்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்


திருப்பூர் 11-வது வார்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Sept 2021 9:57 PM IST (Updated: 2 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 11வது வார்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அனுப்பர்பாளையம், 
திருப்பூர் 11-வது வார்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகளை முற்றுகையிட்டு
திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட ஈ.பி.காலனி, நாகாத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் அங்குள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இந்த நிலையில் வீட்டு இணைப்புகளுக்கு நல்ல தண்ணீர் முறையாக வழங்கக்கோரியும், பழுதடைந்த குழாய்களை சரி செய்யக்கோரியும் முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில் 11-வது வார்டு பொதுமக்கள் நேற்றுகாலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது குடிநீர் பிரச்சினை நீண்ட நாட்களாக இருப்பதாகவும், பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
 மேலும் உதவி கமிஷனர் சுப்பிரமணியம் அலுவலகத்தில் இல்லாததால், அவர் வந்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி அதிகாரிகள் முன்பு அமர்ந்து கொண்டனர். 
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதனால் சமரசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 
கோரிக்கை மனு
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
 11-வது வார்டுக்குட்பட்ட சாமிநாதபுரத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளள 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அந்த பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் வீட்டு இணைப்புகளில் தண்ணீர் அழுத்தம் மிகக்குறைவாக உள்ளது. மேலும் புதிய திட்டத்தின் கீழ் போடப்பட்ட குழாய்கள் ஆழம் குறைவாக உள்ளது. இதனால் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் தண்ணீர் பாய்ந்து வருகிறது.
 இதனால் வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பழுதடைந்த வீட்டு இணைப்பை சரி செய்ய ரூ.3 ஆயிரம் செலவாகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே உடனடியாக குடிநீர் பிரச்சினை மற்றும் குழாய் உடைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story