மரக்காணம் அருகே தைலந்தோப்பில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்திருந்த ரூ.3 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
மரக்காணம் அருகே தைலந்தோப்பில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள எரிசாராய கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கரிப்பாளையம் பகுதியில் எரிசாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மரக்காணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியசோபிமஞ்சுளா தலைமையிலான போலீசார், கரிப்பாளையம் கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லோகு என்பவரின் வீட்டு பின்புறமுள்ள ஒரு தைல தோப்பில் பள்ளம் தோண்டி மண்ணுக்குள் எரிசாராய கேன்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
உடனே அந்த பள்ளத்தை போலீசார், மண்வெட்டியால் தோண்டி பார்த்தபோது அதில் 22 கேன்கள் இருந்தது. 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த கேன்களில் 770 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. தற்போது லோகு, சாராய வழக்கில் கைதாகி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் இருப்பதால் அவரது நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் இந்த எரிசாராயத்தை கடத்திக்கொண்டு வந்து தைலந்தோப்பில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள அந்த எரிசாராய கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதனை எங்கிருந்து கடத்திக்கொண்டு வந்தனர் என்றும், யார், யார் இந்த எரிசாராய கேன்களை பதுக்கி வைத்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story