மேல்மலையனூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் திடீர் சாவு


மேல்மலையனூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 2 Sep 2021 4:39 PM GMT (Updated: 2021-09-02T22:09:14+05:30)

மேல்மலையனூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் திடீரென உயிரிழந்தார். நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மகாதேவி மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி விஜயா (வயது 37). இவர் நேற்று முன்தினம், அதே கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நடைபெறும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது விஜயாவுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 

பெண் பலி

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிறிது நேரத்தில் விஜயாவின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை  விஜயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் மகாதேவி மங்களம் கிராம மக்கள் மற்றும் விஜயாவின் உறவினர்கள் ஒன்று திரண்டு விஜயாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.  

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், வளத்தி சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வல்லம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது விஜயாவின் உறவினர்கள் கூறுகையில், இந்த திட்டத்தில் வேலையில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரிகள் தடுப்பூசி போட்டால்தான் வேலை வழங்கப்படும் என்று கூறுவதால் கூலி கிடைக்கும் என்ற எண்ணத்தில் இணை நோய் உள்ளவர்கள் கூட ஊசி போட்டுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் டாக்டர்கள் யாரையும் பரிசோதித்து தடுப்பூசி போடுவதில்லை.

அரசு வேலை

பாதிக்கப்பட்ட விஜயாவை செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது கூட கால தாமதமாகவே சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் அலட்சியம், அதிகாரிகளின் கட்டாயம் ஆகியவற்றால்தான் விஜயாவின் இறப்பு நேர்ந்துள்ளது. எனவே இறந்துபோன விஜயாவின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர். இதை கேட்ட அதிகாரிகள், இதுகுறித்து அரசிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்துபோன விஜயாவுக்கு நிவேதா (17) என்ற மகளும், மணிகண்டன் (13), சுரேஷ் (11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். 

Next Story