ரூ.30 லட்சம் மதிப்பிலான அரியவகை கத்தாழை மீன்கள்


ரூ.30 லட்சம் மதிப்பிலான அரியவகை கத்தாழை மீன்கள்
x
தினத்தந்தி 2 Sep 2021 5:04 PM GMT (Updated: 2021-09-02T22:34:51+05:30)

நாகையில், மீனவர்கள் வலையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அரிய வகை கத்தாழை மீன்கள் சிக்கியது. ஒரு மீன் ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகப்பட்டினம்:
நாகையில், மீனவர்கள் வலையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அரிய வகை கத்தாழை மீன்கள் சிக்கியது. ஒரு மீன் ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வலையில் சிக்கிய கத்தாழை மீன்கள்
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு சில விசைப்படகு மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்ததும், தங்கத்தை போல் விலை மதிக்க கூடியதுமான கூறல் மீன் எனப்படும் கத்தாழை மீன்கள் சிக்கின. 
இது குறித்த தகவல் அறிந்த வியாபாரிகள் காலையில் இருந்தே கத்தாழை மீனை வாங்க நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். ஒரு கத்தாழை மீன் 18 கிலோவில் இருந்து 22 கிலோ வரை இருந்தது. ஒரு கிலோ ரூ.5,440-க்கு விலை போனது.
1 மீன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்
சராசரியாக ஒரு மீன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் போனது. அதன்படி மொத்தம் 29 மீன்களும் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போனது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஏற்றுமதி வாய்ந்த கத்தாழை மீன்கள் அதிக அளவில் கிடைத்திருப்பது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:-
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்த வகையான கற்றாழை மீன்கள் கிடைக்கும். மீனவர்கள் வலையில் மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியதும், விலைமதிக்க கூடியதுமான இந்த வகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
மருத்துவ குணம்
இந்த வகையான கத்தாழை மீன்களின் அடிவயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த நெட்டி மூலம் மீன்கள் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும்.
மேலும் இந்த நெட்டியானது ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. ஆண்மை தன்மைக்கு அருமருந்தாகவும் உள்ளது. இந்த வகையான மீன்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story