கிருஷ்ணகிரியில் கொட்டி தீர்த்த கனமழை-வீடு, அரசு அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது


கிருஷ்ணகிரியில் கொட்டி தீர்த்த கனமழை-வீடு, அரசு அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 2 Sept 2021 11:02 PM IST (Updated: 2 Sept 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் வீடு, அரசு அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

கிருஷ்ணகிரி:
பலத்த மழை 
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. காலை 6.30 மணி வரையில் விடாமல் 8 மணி நேரம் கனமழைபெய்தது.
குளம் போல தேங்கியது 
இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரின் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் கழிவுநீர் வெளியேறி சாலைக்கு வந்தது. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசியது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி சென்றது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் மழைநீர் குளம் போல தேங்கியது.
அதன் அருகில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதே போல ராயக்கோட்டை சாலை ராஜாஜி நகர் 4-வது தெரு, பழையபேட்டை நல்லதம்பி செட்டி தெரு போன்ற பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பொதுமக்கள் சிரமம் 
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மழையால் அந்த பகுதி சேறும், சகதியுமாக மாறியது. மேலும் தண்டேகுப்பம் டைட்டான் நகர் பகுதியை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர சிரமப்பட்டார்கள்.
மழையளவு
நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 125.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
இதே போல பாரூரில் 22.2, தேன்கனிக்கோட்டை - 20.4, ஓசூர் -10.5, அஞ்செட்டி - 3, தளி - 10, பெனுகொண்டாபுரம் - 10.2, சூளகிரி - 5, நெடுங்கல் -13.

Next Story