ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு 20 தடுப்பணைகள் நிரம்பின


ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு 20 தடுப்பணைகள் நிரம்பின
x
தினத்தந்தி 2 Sep 2021 5:49 PM GMT (Updated: 2 Sep 2021 5:49 PM GMT)

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு 20 தடுப்பணைகள் நிரம்பின

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் 20 தடுப்பணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உபரிநீர் திறப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய ஆயக் கட்டு, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் தென் மேற்கு பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

 கடந்த 23-ந் தேதி அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக குளங்கள், தடுப்பணைகளுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டது. 

நிரம்பி வழியும் தடுப்பணைகள் 

இதன் காரணமாக தடுப்பணைகள் நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பி.ஏ.பி. அணை கள் வேகமாக நிரம்பி வருகிறது. 

ஆழியாறு அணையும் 2 முறை நிரம்பி விட்டது. இதற்கிடையில் உபரிநீர் வீணாகுவதை தடுக்க தடுப்பணைகள், குளங்களுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. 

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு 

இதன் காரணமாக கரியாஞ்செட்டிபாளையம், குள்ளேகவுண்டன் புதூர், ஜல்லிப்பட்டி, அங்கலகுறிச்சி பகுதிகளில் உள்ள 20 தடுப்பணைகள் நிரம்பி விட்டன. இதை தவிர எலவக்கரை குளம், குப்புச்சிபுதூர் குளங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

கொங்கலப்பம்பாளையம் தடுப்பணைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தடுப்பணைகள், குளங்கள் நிரம்பி வருவதால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story