ஏ.டி.எம்.கார்டு மூலம் பணம் திருடிய வாலிபரை மடக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
காட்டுமன்னார்கோவிலில் முதியோர்களை ஏமாற்றி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் திருடிய வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்தார். அவரை விசாரணைக்காக அழைத்து சென்ற போது, அவரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பல நாட்களாக ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வரும் முதியோர்களை ஏமாற்றி வாலிபர் ஒருவர், பணத்தை திருடிச்சென்று வந்தார். இது பற்றிய புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, அவரை பிடிக்க போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மடக்கி பிடித்தார்
அதன்படி நேற்று காலை 11.30 மணி அளவில் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் உள்ள ஏ.டி.எம். மையம் வாசலில் சந்தேகப்படும் படியாக ஒருவர் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
பின்னர் அங்கு சந்தேகமான முறையில் நின்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது, அந்த வாலிபர் தான் பல நாட்களாக ஏ.டி.எம். மையங்களில் முதியோரை ஏமாற்றி பணம் திருடி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை தனது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர வைத்து விட்டு, விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார்.
தப்பி ஓட்டம்
அவர்கள் நீதிமன்றம் அருகே சென்ற போது, சப்-இன்ஸ்பெக்டருக்கு பின்னால் இருந்த அந்த வாலிபர், அவரை கீழே தள்ளி விட்டு சிறிது தூரம் சாலையில் ஓடினார். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் அவரை விடாமல் துரத்திச்சென்றார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, அந்த வாலிபரை விரட்டி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த மகாராஜன் மகன் ஜோதிபாசு (வயது 32) என்று தெரிந்தது.
பரபரப்பு
இவர் தான் முதியோர்களை ஏமாற்றி அவர்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் திருடி வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story