கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Sept 2021 1:04 AM IST (Updated: 3 Sept 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தா.பழூர்:

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் அய்யனார் கோவிலின் முகப்பில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. தா.பழூர்- ஜெயங்கொண்டம் சாலையையொட்டி, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள இந்த கோவிலில், அந்த சாலை வழியாக செல்லும் பக்தர்கள் வழிபட்டுவிட்டு, உண்டியலில் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை கோவில் பூசாரி கருணாநிதி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் முகப்பில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள், கோவிலில் உள்ள அரிவாளை பயன்படுத்தி உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றதாகவும், அந்த உண்டியலில் ரூ.50 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் உடனடியாக தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களான சப்-இன்ஸ்பெக்டர் துர்க்காதேவி, சத்யராஜ் ஆகியோர் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘மலர்’ வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இந்த கோவில் அருகே உள்ள சாலை கும்பகோணம் - சென்னை இடையிலான அதிக போக்குவரத்து நிறைந்த சாலை. மேலும் கோவிலின் எதிர்புறம் நான்கு சாலைகளையும் கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. உண்டியல் உள்ள இடத்தில் மின்விளக்குகள் பிரகாசமாக அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் துணிச்சலாக உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story