கோவில்கள் முன்பு விளக்கேற்றி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவை தடையை மீறி நடத்துவோம் என்று கூறிய இந்து முன்னணியினர் மதுரையில் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை
விநாயகர் சதுர்த்தி விழாவை தடையை மீறி நடத்துவோம் என்று கூறிய இந்து முன்னணியினர் மதுரையில் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனாவை காரணம் காட்டி இந்தாண்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலம் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டுவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதை கண்டித்து மதுரையில் இந்து முன்னணியினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கோச்சடை முத்தையா கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் என 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவில் அருகே இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்துவதற்கு தடைவிதித்துள்ள தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
பின்னர் நிர்வாகிகள் அனைவரும் விளக்கை ஏற்றி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்த அனுமதி தர வேண்டுமென கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறும்போது, விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தொடர்ந்து தடைவிதித்தால் தடையை மீறி ஆண்டு விழா நடத்துவோம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடை விதித்த பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசின் நிலைப்பாடு என்னவாயிற்று என்று அரசுக்கு நன்றாக தெரியும். எனவே அரசு மதவழிபாட்டில் தலையிடக்கூடாது. பக்தர்களின் நிலை அறிந்து கண்டிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் விநாயகர் சதுர்த்தி விழாவைவழக்கம்போல கொண்டாடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்கள். ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் நகர தலைவர் ராஜசேகர், பாரதீன ஜனதா கட்சியின் மண்டல தலைவர் ராமதாஸ், பொதுச்செயலாளர் ராஜேஷ்வரன், இந்து முன்னணி நகர துணைத் தலைவர் பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எழுமலையில் உள்ள விநாயகர் கோவில் முன்பு இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story