பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது; மின்னல் தாக்கி 2 ஆடுகள் செத்தன
தா.பழூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது. மின்னல் தாக்கி 2 ஆடுகள் செத்தன.
தா.பழூர்:
பலத்த மழை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தா.பழூர் கடைவீதி மற்றும் கடைவீதியை ஒட்டிய தெருக்களில் இருந்து மழைநீர் கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலை ஓரத்தில் வழிந்து ஓடியது. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே மழைநீர் சென்றபோது சரியான வடிகால் வசதி இல்லாததால், சுற்றுச்சுவரின் மீது மழைநீர் மோதி அங்கு தேங்கியது. ஒரு கட்டத்தில் மழைநீர் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு அடியோடு இடிந்து சாய்ந்தது.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த பகுதியில் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால் வசதியை ஏற்படுத்தி தருவதோடு, இடிந்த சுற்றுச்சுவரை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
2 ஆடுகள் செத்தன
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் வசிப்பவர் கொளஞ்சிமணி. இவர் சுமார் 400 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அருள்மொழி பொன்னாற்றங்கரை அருகே வயல் வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாலை நேரத்தில் திடீர் என மழை பெய்யத்தொடங்கியது.
இதனால் ஆடுகள் அருகில் உள்ள கருவேல மரக்காடு பகுதியில் நுழைந்து விட்டன. அப்போது பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. ஆடுகள் மழைக்கு காட்டுக்குள் ஒதுங்கியதால், கொளஞ்சிமணியும் காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது காட்டுப்பகுதியில் மின்னல் தாக்கியது. இதனால் கொளஞ்சிமணி, ஆடுகளை அங்கிருந்து விரைவாக வீட்டிற்கு ஓட்டிச்சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது 2 ஆடுகளை காணவில்லை. இதையடுத்து அவர் காட்டுப்பகுதிக்கு வந்து பார்த்தபோது 2 ஆடுகளும், மின்னல் தாக்கி செத்து கிடந்தன. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பரணிகுமார் விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story