வாலிபரை வெட்டிக்கொன்று கால்வாயில் பிணம் வீச்சு


வாலிபரை வெட்டிக்கொன்று கால்வாயில் பிணம் வீச்சு
x
தினத்தந்தி 3 Sept 2021 1:29 AM IST (Updated: 3 Sept 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே வாலிபரை வெட்டிக்கொன்று பிணத்தை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

நாகமலைபுதுக்கோட்டை
மதுரை அருகே வாலிபரை வெட்டிக்கொன்று பிணத்தை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கால்வாயில் பிணம்
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே நிலையூர் கால்வாய் உள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் நிலையூர் கால்வாய் நீரில் வாலிபர் பிணம் மிதப்பதாக நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் சட்டை பையில் விசிட்டிங் கார்டு ஒன்று இருந்தது. மேலும் கழுத்து அறுக்கப்பட்டும், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களும் காணப்பட்டது. முகம் மற்றும் வயிறு பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. 
போலீசார் விசாரணையில், இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் பொட்டலை சேர்ந்த மகேஷ்வரன்(வயது 36) என்பதும், பழைய பேப்பர்களை சேகரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 
 கொலை செய்து வீசியுள்ளனர்
முன்விரோதம் காரணமாக மகேஷ்வரனை வெட்டிக் கொலை செய்து கால்வாயில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். மகேஷ்வரனுக்கு 2 மனைவிகள் என்றும், அவர்களை பிரிந்து நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழமாத்தூரில் தனி வீடு எடுத்து அவர் தங்கி இருந்துள்ளார். கொலை செய்யப்பட்டு வாலிபர் உடல் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story