கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு- போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் பேட்டி


கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு- போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2021 1:52 AM IST (Updated: 3 Sept 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.

நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறினார்.

101 செல்போன்கள் பறிமுதல்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போன சுமார் ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 58 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்த வருடம் காணாமல் போன ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்து 500 மதிப்புள்ள 43 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும். விதிகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை மாநகர பகுதியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ரவுடிகள் 278 பேர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்படை அமைப்பு

நெல்லை மாநகர பகுதியில் நடைபெறுகின்ற கொலை, கொலை முயற்சி, களவு, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் மொத்தம் 45 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கூரியர் மூலம் அனுப்பினால் அதை கொண்டு வருகிற கூரியர் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் தற்போது நடந்துள்ள கொள்ளையில், அந்த வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் உள்ளே இருப்பவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் வழங்கினார். சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர்கள் ஆறுமுகம், முத்தரசு, நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story