திருச்சி கலெக்டர் உயிர் தப்பினார்


திருச்சி கலெக்டர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 3 Sept 2021 1:52 AM IST (Updated: 3 Sept 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் உயிர் தப்பினார்

பனமரத்துப்பட்டி, செப்.3-
சேலம் அருகே கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் திருச்சி கலெக்டர் சிவராசு உயிர் தப்பினார். மேலும் விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி கலெக்டர்
திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் சிவராசு. இவர் நேற்று சேலத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் வந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்றுவிட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டார். அந்த காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டினார். 
இரவு 10.15 மணி அளவில் சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் சென்று கொண்டிருந்தது. அப்போது நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலத்துக்கு தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது.
கலெக்டர் உயிர் தப்பினார்
தாசநாயக்கன்பட்டி பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பியில் மோதியது. மேலும் அந்த மினிலாரி சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசைக்கு திரும்பியது.
இதனிடையே அந்த வழியாக வந்த கலெக்டரின் கார் மீது மினி லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் அந்த மினிலாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தில் கலெக்டர் சிவராசுவின் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதில் கலெக்டர் சிவராசு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் கலெக்டரின் கார் டிரைவர் சீனிவாசன், கலெக்டரின் உதவியாளர் பெரியண்ணன் சாமி மற்றும் மினி லாரி டிரைவர் ஆகிய 3 ேபரும் காயம் அடைந்தனர். 
விசாரணை
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கலெக்டரின் கார் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் கிடைத்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 
இந்த விபத்து காரணமாக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அதனை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் சேலத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story