குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
கன்னிவாடி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கோம்பை என்னுமிடத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக ஊராட்சியில் உள்ள வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
நேற்று ஆத்திரமடைந்த தர்மத்துப்பட்டி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கிராம மக்களை அழைத்து ஊராட்சி தலைவர் சின்னையா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இன்னும் ஒரு வாரத்துக்குள் குடிநீர் வினியோகம் சீர்செய்யப்பட்டு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story