மின்வேலி அமைத்து காட்டு பன்றியை கொன்ற விவசாயி கைது


மின்வேலி அமைத்து காட்டு பன்றியை கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 3 Sept 2021 2:14 AM IST (Updated: 3 Sept 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் மின்வேலி அமைத்து காட்டு பன்றியை கொன்ற விவசாயியை, வனத்துறையினர் கைது செய்தனர்.

சிவகிரி:
சிவகிரியில் மின்வேலி அமைத்து காட்டுப்பன்றியை கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

ரோந்து பணி

சிவகிரிக்கு மேற்கே வனப்பகுதியில் திருட்டுத்தனமாக மிருகங்களை வேட்டையாடி மாமிசங்களை கடத்தி செல்வதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகிரி வனரேஞ்சர் சுரேஷ் தலைமையில் சிவகிரி தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார், வடக்குப்பிரிவு வனவர் மகேந்திரன் மற்றும் வனக்காப்பாளர்கள் சுதாகர், இம்மானுவேல், பெருமாள், அருண்மொழி, பிரதீப், வனக்காவலர்கள் செல்வராஜ், மணிகண்டன், வேட்டை தடுப்பு காவலர்கள் சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தனிக்குழுவாக சிவகிரிக்கு மேற்கே பெரிய ஆவுடைப்பேரி, விஜயரங்கப்பேரி கண்மாய், ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

விவசாயி

அப்போது அங்கு வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகிரி மேலரதவீதி அருகே பேட்டை தெருவை சேர்ந்த வீரையா (வயது 55) என்பது தெரியவந்தது. இவர் விஜயரங்கப்பேரி கண்மாயைச் சேர்ந்த வயல் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இங்கு காட்டுப்பன்றிகள்  கூட்டமாக வந்து கரும்பு பயிர்களை தின்று அழித்து நாசம் செய்தன. எனவே பயிர்களை காப்பதற்காக தோட்டத்தை சுற்றி அனுமதியின்றி மின்வேலி அமைத்தார். இந்தநிலையில் வழக்கமாக பயிர்களை தின்பதற்காக வந்த காட்டுப்பன்றி மின் வேலியில் சிக்கி இறந்தது. இதனைக் கண்ட விவசாயி வீரையா, உடனே காட்டுப்பன்றியை சமையல் செய்து சாப்பிட்டு விட்டு மீதமுள்ள மாமிசத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து வீரையாவை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வைத்திருந்த மாமிசம், அரிவாள் போன்றவற்றையும் கைப்பற்றி சிவகிரி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், வீரையாவுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story