ஆசிரியர் பயிற்சி மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டம்


ஆசிரியர் பயிற்சி மாணவிகள் தேர்வை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2021 2:24 AM IST (Updated: 3 Sept 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், ஆசிரியர் பயிற்சி பொதுத்தேர்வை புறக்கணித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொரோனா காலத்தில் தேர்வை ஆன்லைனில் நடத்த கோரிக்கை விடுத்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில், ஆசிரியர் பயிற்சி பொதுத்தேர்வை புறக்கணித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொரோனா காலத்தில் தேர்வை ஆன்லைனில் நடத்த கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு நேற்று முதல் நேரடி பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு 14 நாட்கள் நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கோட்டாரில் ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு, நேற்று காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதுவதற்காக 91 மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களில் 6 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
மீதமுள்ளவர்கள் தேர்வு எழுதாமல் தேர்வு மையத்தை விட்டு வெளியேறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தரையில் அமர்ந்து தேர்வை புறக்கணிக்கிறோம் என்றும் கோஷமிட்டனர். 
ஆன்லைன் தேர்வுக்கு ஆதரவு
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் கூறியதாவது:-
தேர்வுத்துறை சார்பில் ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்புக்கான பொது தேர்வு நேரடியாக இன்று (அதாவது நேற்று) முதல் 14 நாட்கள்  நடக்கிறது. கொரோனா காலக் கட்டத்தில் தொடர்ந்து 14 நாட்கள் நேரடியாக சென்று மையங்களில் தேர்வு எழுதுவதால், கொரோனா காரணமாக உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. ஆசிரியர் பட்டயத்தேர்வை நேரடியாக தேர்வு மையங்களில் நடத்தாமல், ஆன்லைன் வழியாக நடத்த வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்கான மதிப்பெண் மதிப்பிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்து வருகிறார்கள். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அதாவது நேற்று) முதல் தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தேர்வு மைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினா். இருப்பினும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடாமல் தேர்வை புறக்கணித்தனர்.

Next Story