ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.4½ லட்சம் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.4½ லட்சம் நகை திருட்டு
x
தினத்தந்தி 3 Sept 2021 2:33 AM IST (Updated: 3 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடக்கு நந்தல் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி கிரிஜா (வயது 33). இவர் சம்பவத்தன்று தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூரில் இருக்கும் தன்னுடைய அக்காளை பார்ப்பதற்காக அரசு பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் கெடிலம் பஸ் நிறுத்தம் வந்த போது, அங்கிருந்து 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் ஏறி கிரிஜா இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தார்.
பின்னர் அவர், டிக்கெட் எடுப்பதற்காக, தனது கையில் இருந்த சில்லரை காசுகளை எடுத்து உதவுமாறு கிரிஜாவிடம் கூறியதாக தெரிகிறது. அவர், அந்த பெண்ணின் கையில் இருந்த சில்லரையை எடுத்த போது, கிரிஜா கைப்பையில் இருந்த செயின், வளையல், மாட்டல், தோடு என 13½ பவுன் நகையை அந்த பெண் திருடி விட்டு, பண்ருட்டியில் உள்ள மளிகைக்கடை பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்று விட்டதாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதை அறியாத கிரிஜா கடலூர் பஸ் நிலையம் வந்து, தனது கைப்பையை பார்த்த போது, அதில் இருந்த தங்க நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் பெண்ணிடம் மற்றொரு பெண் நகையை திருடிச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story